மட்டக்களப்பு–பொத்துவில் அல்லது மாத்தறை–கல்முனை புகையிரதப் பாதை விரிவாக்கம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது – அஷ்ரப் தாஹீர் MP வலியுறுத்தல்
மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரை அல்லது மாத்தறையிலிருந்து கல்முனை வரை புகையிரதப் பாதையை விரிவுபடுத்துவது தொடர்பாக கௌரவ எம்.எஸ். உதுமாலெப்பை முன்வைத்த தனிநபர் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹீர் பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.
உரையின்போது அவர், கிழக்கு மாகாணம் சுமார் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக உள்நாட்டு யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பிராந்தியமாக இருந்ததால், கடந்த காலங்களில் தேவையான வளங்கள் இருந்தபோதிலும் பல அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வாய்ப்புகள் இழக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
தற்போது நாட்டின் பொருளாதார நிலைமை முன்னேற்றமடைந்துள்ள நிலையில், இத்தகைய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உட்கட்டமைப்புத் திட்டங்களை முன்னெடுக்க ஏற்ற காலம் உருவாகியுள்ளதாகவும், கிழக்கு மக்களின் நீண்டகால கனவாக இருந்து வரும் புகையிரதப் பாதை விரிவாக்கத்தை இனியும் தாமதிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், கிழக்கு மாகாணம் சுற்றுலா, விவசாயம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் மூலம் நாட்டின் வருவாய்க்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் பிராந்தியமாக இருப்பதாகவும், அப்பகுதி மக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்வது அரசின் பொறுப்பாகும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவர்களும் விரிவுரையாளர்களும் கல்வி மற்றும் ஆய்வு நடவடிக்கைகளுக்காக வருகை தருவதால், மேம்பட்ட புகையிரத சேவை கல்வி மற்றும் சுற்றுலாத்துறைக்கும் பெரும் ஊக்கமாக அமையும் என அவர் சுட்டிக்காட்டினார்.
புகையிரதப் பாதை விரிவாக்கம் கிழக்கு மக்களுக்கு நாட்டின் ஏனைய பகுதிகளுடன் எளிதில் பயணிக்கும் வசதியை உருவாக்குவதோடு, போக்குவரத்து செலவுகளையும் கணிசமாகக் குறைக்கும் என்றும் அஷ்ரப் தாஹீர் தெரிவித்தார்.
மேலும், மட்டக்களப்பிலிருந்து கொழும்பு மற்றும் பிற பகுதிகளுக்கு வாகனங்களை புகையிரதத்தின் மூலம் ஏற்றிச் செல்லும் சேவையை அறிமுகப்படுத்துவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். தற்போது கிழக்கிலிருந்து கொழும்பு வரை தனியார் வாகனத்தில் பயணிக்க அதிகளவிலான எரிபொருள் செலவாகும் நிலையில், புகையிரதத்தின் மூலம் வாகனங்களை குறைந்த செலவில் கொண்டு செல்லும் வசதி ஏற்படுத்தப்பட்டால், பொதுமக்கள் பெரிதும் பயனடைவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, மட்டக்களப்பு–பொத்துவில் அல்லது மாத்தறை–கல்முனை புகையிரதப் பாதை விரிவாக்கத் திட்டத்தை அரசு தேசிய மற்றும் பிராந்திய அபிவிருத்தி நோக்கில் முன்னுரிமையுடன் கவனத்தில் கொண்டு விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
Read full News on www.acmc.lk
ஊடகப்பிரிவு,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்.