குடிநீர், விவசாயம் மற்றும் மனித–யானை மோதல் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் : பாராளுமன்றில் அஷ்ரப் தாஹீர்
அம்பாறை மாவட்டத்தின் குடிநீர், விவசாயம் மற்றும் மனித–யானை மோதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடி தீர்வுகளை வழங்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹீர் இன்று பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
அம்பாறை மாவட்டத்தின் நீர்வழங்கல் திட்டத்தின் மூலம் கரையோரப் பகுதிகள் உட்பட பல பிரதேசங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் குடிநீருக்கான தேவை உயர்ந்துள்ள நிலையில், தற்போதைய விநியோக முறை போதுமானதாக இல்லை என்றார். குறிப்பாக கரையோரப் பகுதிகளில் உருவாகியுள்ள புதிய குடியிருப்புகள் மற்றும் அடுக்குமாடிக் கட்டிடங்களுக்கு போதுமான நீர் அழுத்தம் கிடைக்காததால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொத்துவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு நீண்டகாலமாக வாக்குறுதி அளிக்கப்பட்ட குடிநீர் திட்டங்கள் இன்னும் நடைமுறைக்கு வராததை நினைவுபடுத்திய அவர், கடந்த காலங்களில் இனவாத அரசியல் காரணங்களால் அவை தாமதப்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டினார். இன, மத பேதமின்றி நாட்டை முன்னேற்றும் தற்போதைய அரசாங்கம், அந்த மக்களுக்கான குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
விவசாயத் துறையைப் பொறுத்தவரையில், நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில் சுமார் 35 சதவீதத்தை அம்பாறை மாவட்டம் வழங்குவதாகக் குறிப்பிட்ட அவர், விவசாயிகளின் உற்பத்தியை பாதுகாக்க நெற்களஞ்சியங்களை முழுமையாகப் புனரமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றார்.
குறிப்பாக களஞ்சியசாலைக்கான ஒதுக்கப்பட்ட நிதி இருந்தபோதிலும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என்றும், நிந்தவூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை தீர்க்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இத்திட்டங்கள் தாமதமாவதால் அரசாங்கம் மக்களுக்காக எதையும் செய்யவில்லை என்ற தவறான எண்ணம் உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.
மனித–யானை மோதல் அம்பாறை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக தெரிவித்த அஷ்ரப் தாஹீர், யானைகளைப் பாதுகாப்பதோடு மனித உயிர்கள், குடியிருப்புகள் மற்றும் சொத்துக்களையும் பாதுகாக்கும் வகையில் நிரந்தரத் தீர்வொன்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார். குடியிருப்புகள் விரிவடைந்து வரும் நிலையில் உணவு தேடி யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவது அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் சேவைகள் தொடர்பிலும் அவர் பல குறைகளை முன்வைத்தார். அம்பாறை மாவட்டத்தில் நீர் இணைப்பு கட்டணங்கள் மற்றும் கட்டணப் பணம் செலுத்துவதற்கான சேவை மையங்கள் நான்கு இடங்களில் மட்டுமே இயங்குவதால் மக்களுக்கு சிரமம் ஏற்படுவதாகவும், மேலும் பல சேவை மையங்களை நிறுவ வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இணையவழி கட்டணங்கள் செலுத்தப்பட்ட பின்னரும் கணக்கில் பதிவாக பல நாட்கள் எடுப்பதாகவும், அந்த நடைமுறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், புதிய நீர் இணைப்புகளுக்குத் தேவையான பிரதான குழாய்கள் மற்றும் உபகரணங்களின் பற்றாக்குறையால் பல வேலைத்திட்டங்கள் தாமதமடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தேவையான பொருட்களை விரைவாக வழங்கி மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
ஊடகப்பிரிவு,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்.