தலைவர், தவிசாளருடன் ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் சந்திப்பு
– முக்கிய விடயங்கள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஸாத் பதியுதீன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளருமான எம்.எஸ்.எம்.அமீர் அலி ஆகியோரை கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் எம்.எம்.மீராசாஹிப் ஹலால்தீன் கொழும்பில் சந்தித்து பிரதேசத்தின் நிலைமை மற்றும் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடினார்.
இதன் போது, மட்டக்களப்பு மாவட்டத்தின் சமூக, கல்வி, விவசாய மற்றும் அபிவிருத்தி சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்ததுடன், கல்குடா பிரதேச மக்களின் எதிர்காலத்தேவைகள், மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தித்திட்டங்களை ஒருங்கிணைத்தல் தொடர்பிலும் கோரிக்கை முன்வைத்தார்.
கல்குடாப்பிரதேச கல்வி வளங்களை மேம்படுத்துதல், மக்களின் அடிப்படை வசதிகளை வலுப்படுத்துதல், பல ஆண்டுகளாக நிலவி வரும் காணிப்பிரச்சினைகளுக்கு நிரந்தரத்தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் பிரதேச சபைத்தவிசாளர் வலியுறுத்தினார்.
குறிப்பாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் (UDA) நிர்வாகத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ள சில பகுதிகள் மற்றும் கிராம சேவகர் பிரிவுகளை மீளாய்வு செய்து, அவற்றை உள்ளூராட்சி மன்றத்தின் நிர்வாகத்தின் கீழ் மீண்டும் கொண்டு வருவதற்கான கோரிக்கைகளை பாராளுமன்றத்தில் முன்வைத்து உரிய தீர்வுகளைப் பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன், விவசாயிகளை நேரடியாகப்பாதித்து வரும் நீர்ப்பாசனப்பிரச்சினைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்ததுடன், குறிப்பாக, ஆத்துச்சேனை, கிடச்சிமடு, மைலந்தனை, கலுவாமடு விவசாயப்பிரதேசங்கள் இதுவரை உரிய நீர்ப்பாசனத்திட்டங்களின் கீழ் முழுமையாக உள்வாங்கப்படாத நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டிய தவிசாளர், குறித்த கிராமங்களை நீர்ப்பாசனத்திட்டங்களுடனும் நீர்ப்பாசனத்திணைக்களத்தின் செயற்பாடுகளுடனும் இணைத்து விவசாயிகளுக்குத் தேவையான நீர் வசதிகளை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரினார்.
இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் குரலெழுப்பி, விவசாய மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு தீர்வினைப்பெற்றுத்தருமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், முஸ்லிம் மக்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார உரிமைகளுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஸாத் பதியுதீன் அவர்களின் பங்களிப்புக்கும் நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகவும் சவாலான காலகட்டங்களில் தனது அரசியல் நிலைப்பாடுகள், சமூகப்பணிகளின் போது பல்வேறு சிரமங்களையும் சோதனைகளையும் எதிர்கொண்ட போதிலும், மக்கள் சேவையிலிருந்து பின்வாங்காமல் செயற்பட்ட தலைவராக தாங்கள் திகழ்வதாக தவிசாளர் பாராட்டுத்தெரிவித்தார்.
கடந்த ஆட்சிக்காலத்தில் தலைவரும் குடும்பத்தினரும் எதிர்கொண்ட விசாரணைகள், கைதுகளுக்கும் தனது கவலையைப் பகிர்ந்து கொண்டார்.
இவ்வாறான சவால்களுக்கு மத்தியிலும் மக்கள் சேவையை முதன்மைப்படுத்தி, மக்களின் உரிமைகள், கல்வி, வாழ்வாதாரம் மற்றும் அபிவிருத்திக்காக தொடர்ந்து போராடும் தலைமைத்துவமே நாட்டிற்கு அவசியமானவை எனவும், என்றும் தலைவருக்கு உறுதுணையாகவும் அதிகாரத்தில் இல்லாத நிலையிலுல் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நலனில் அக்கரையோடும் செயலாற்றி வரும் கட்சியின் தவிசாளர் அமீர் அலி அவர்களுக்கும் தனது நன்றி பாராட்டுதலைத் தெரிவித்துக் கொண்டார்.