உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) இணைந்து இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அதிகாரத்திற்கு கீழுள்ள கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச சபை தவிசாளர் எம்.எம்.ஹலால்தீன் அவர்களினால் முன்மொழியப்பட்ட இரண்டு அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பாக கள ஆய்வு மற்றும் சாத்திய ஆய்வு நடவடிக்கைகள் கடந்த 20.06.2026ம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றன.
இக்கள ஆய்வில் ஆசிய வளர்ச்சி வங்கியின் பிரதிநிதி திரு. சம்பத், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் பணிப்பாளர் திரு. திமுது, மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திருமதி எம்.ஆர்.எப்.றிப்கா உள்ளிட்ட ஆசிய வளர்ச்சி வங்கி, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு, உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட மயானப்பகுதியை நினைவிடப் பூங்காவாக அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாளாந்தம் நூற்றுக்கணக்கானோர் இவ்விடத்திற்கு வருகை தருவதால், குறித்த இடத்தை பூங்கா வடிவில் அழகுபடுத்தி, உள்ளக வீதிகள், ஓய்விட வசதிகள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளை உருவாக்குவதன் மூலம் பார்வையாளர்களுக்கு சிறந்த சூழலை ஏற்படுத்தல்.
ஓட்டமாவடி பாலத்தின் கீழ் அமைந்துள்ள ரிவர் பார்க்கிலிருந்து மிதக்கும் படகுகள் மூலம் உணவு வசதிகளுடன் பாசிக்குடா சுற்றுலா வலயத்திலுள்ள ஹோட்டல்கள் வரை சுற்றுலாப்பயணிகளை அழைத்துச்செல்லும் புதிய சுற்றுலா சேவைத்திட்டம் என இரு திட்டங்கள் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் எம்.எம்.ஹலால்தீன் அவர்களினால் முன்மொழியப்பட்டுள்ளது.
இரு திட்டங்களும் நடைமுறைக்கு வந்தால், இயற்கை வளங்களையும் நீர்வழிப்போக்குவரத்தையும் பயன்படுத்தி தனித்துவமான சுற்றுலா அனுபவத்தை வழங்குவதோடு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் வாய்ப்பும் உருவாகும்.
இந்த இரண்டு திட்டங்களும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கு புதிய வருமான வழிகள் உருவாகுமென்பதுடன், பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் சுற்றுலாத்துறை முன்னேற்றத்திற்கும் பாரிய பங்களிப்பை வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.




