ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை இனவாதத்தால் திசைதிருப்ப முயற்சிக்கக் கூடாது; உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் – பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் எந்தவித அரசியல் அல்லது இனவாத அழுத்தங்களுக்கும் இடமளிக்காமல் சுயாதீனமாகவும் நேர்மையாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் மக்களின் வாழ்வாதார சிக்கல்களை சுட்டிக்காட்டியதுடன், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணர வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்.
இன்று அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் சாதாரண மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்குகின்றனர். விவசாயிகள் தங்களது உற்பத்திகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய நேரத்தில், நாட்டை மீண்டும் இனவாத அரசியலுக்குள் இழுத்துச் செல்லும் முயற்சிகள் நடைபெறுவது கவலைக்குரியது என அவர் குறிப்பிட்டார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் இலங்கையின் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு துயர சம்பவமாகும் எனக் குறிப்பிட்ட அவர், அந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான கத்தோலிக்க மக்கள் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்து இன்றும் துன்பங்களை அனுபவித்து வருவதாக தெரிவித்தார்.
இந்த தாக்குதலால் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க சமூகமும், அதன் பின்னர் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்த முஸ்லிம் சமூகமும், உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை அறிந்து நீதி கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இந்த தாக்குதலுக்குப் பின்னால் இருந்த சதியாளர்கள் யார், யார் லாபமடைந்தார்கள், ஏன் இந்த சம்பவம் நடைபெற்றது என்பதற்கான பதில்களை மக்கள் எதிர்பார்க்கின்றனர். தற்போது நடைபெற்று வரும் ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் மூலம் உண்மை வெளிவரும் என்ற நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டிருக்கும் நிலையில், முன்னாள் புலனாய்வு அதிகாரி சுரேஸ் சலே கைது செய்யப்பட்டதற்கு எதிராக சிலர் மேற்கொண்டு வரும் போராட்டங்களை அவர் விமர்சித்தார்.
“ஒருவர் நிரபராதி என்றால் நீதிமன்றத்தின் முன் சென்று தனது நிரபராதித்தனத்தை நிரூபிக்க வேண்டும். விசாரணைகளை எதிர்கொள்ளாமல், உண்ணாவிரதம் இருந்து விசாரணை அதிகாரியை மாற்றுமாறு கோருவது சிறுபிள்ளைத்தனமான செயல் மட்டுமல்ல, விசாரணைகளை திசைதிருப்பும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது” என்றார்.
மேலும், சுரேஸ் சலேவின் கைது தொடர்பாக விமல் வீரவன்ச உள்ளிட்ட சில இனவாத அரசியல் சக்திகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு, சிங்கள மக்களிடையே மீண்டும் இனவாத உணர்வுகளைத் தூண்டி, அதன் ஊடாக விசாரணையின் போக்கை மாற்ற முயற்சித்தால் அது நாட்டிற்கு செய்யும் அநீதியாக மட்டுமல்லாமல், இறுதியில் அவர்களுக்கே பாதகமாக அமையும்.
இலங்கை ஒருகாலத்தில் ஆசியாவின் முன்னேற்றமான நாடுகளில் ஒன்றாகக் கருதப்பட்டது, இன்று கடன் சுமைகளாலும் பொருளாதார நெருக்கடியாலும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
“இத்தகைய நேரத்தில் மீண்டும் மீண்டும் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி நாட்டை பிளவுபடுத்தும் முயற்சிகள் இடம்பெற்றால், நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முடியாது. கடந்த காலத்தில் இதன் விளைவுகளை நாம் அனுபவித்துள்ளோம். சிறுபான்மை சமூகங்களை அச்சுறுத்தி, தொழில்களை இழக்கச் செய்து, நாட்டை விட்டு வெளியேறத் தள்ளிய சூழல்கள் மீண்டும் உருவாகக் கூடாது முஸ்லிம் சமூகத்தினர் கடந்த காலத்தில் பல்வேறு அநீதிகளுக்கு உள்ளாக்கப்பட்டனர், ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர்கள், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், கவிஞர் அஹ்னாப் ஜசீம் உள்ளிட்ட பலர் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டபோது, இன்று சலேவுக்காக குரல் கொடுப்பவர்கள் எவரும் அவர்களுக்காக குரல் கொடுக்கவில்லை என சுட்டிக்காட்டினார்.
அதேபோல், தனது சகோதரர் உட்பட பலர் ஆதாரமின்றி கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட சம்பவங்களையும் நினைவுகூர்ந்த அவர், “அவர்கள் முஸ்லிம்கள் என்பதற்காக அப்போது மௌனமாக இருந்தவர்கள் இன்று சலேவுக்காக நீதியை கோருவது இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுகிறது” என்றார்.
ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம் சமூகத்தினர் எதிர்கொண்ட சமூக, பொருளாதார மற்றும் உளவியல் பாதிப்புகளை விரிவாக எடுத்துரைத்த அவர், பல பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டதோடு, வணிக நிலையங்கள் மூடப்பட்டன, பலர் வேலைவாய்ப்புகளை இழந்தனர், அப்பாவி மக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் .
தன்னையும் கடந்த காலத்தில் எந்த குற்றமும் நிரூபிக்கப்படாமல் கைது செய்து சிறையில் அடைத்த அனுபவத்தை நினைவுகூர்ந்த அவர், “நாங்கள் ஆர்ப்பாட்டங்களாலும் அழுத்தங்களாலும் அல்ல, நீதிமன்றத்தின் ஊடாகவே எங்களது நிரபராதித்தனத்தை நிரூபித்தோம். சட்டத்தின் ஆட்சியை மதிப்பதே சரியான வழி” என்றார்.
எனவே, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் எந்தவித அச்சுறுத்தல்களுக்கும் அல்லது அரசியல் அழுத்தங்களுக்கும் அரசாங்கம் அடிபணியாமல், உண்மையான குற்றவாளிகளை அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார்.