கிண்ணியா பிரதி தவிசாளர் பதவியிலிருந்து அப்துல் அஸீஸ் இராஜினாமா!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் (ACMC) கிண்ணியா நகர சபையின் பிரதி தவிசாளராக கடந்த ஒரு வருட காலமாகப் பணியாற்றிய ஆசிரியர் அப்துல் அஸீஸ், தனது பிரதி தவிசாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
கிண்ணியா மக்களின் வாக்குகளால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் நகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட அவர், தனது பதவிக்காலத்தில் மக்களின் நலனை முன்னிறுத்தி பல்வேறு அபிவிருத்தி மற்றும் சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு, மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்ததாகக் கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியால் முன்னதாக எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில், ஒரு வருட காலத்திற்குப் பின்னர் பிரதி தவிசாளர் பதவியை மாற்றி வழங்கும் தீர்மானத்துக்கு இணங்க, தனது பதவியை தன்னார்வத்துடன் இராஜினாமா செய்து கட்சியின் ஒழுக்கம், ஒற்றுமை மற்றும் தலைமைத்துவத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயற்பாட்டாளராக இருந்து வரும் ஆசிரியர் அப்துல் அஸீஸ், குறிப்பாக கிண்ணியா பிரதேசத்தின் ஏழை மற்றும் தேவையுடைய மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பல்வேறு பணிகளை முன்னெடுத்தவர் எனக் கட்சி பாராட்டியுள்ளது.
எதிர்காலத்திலும் நகர சபை உறுப்பினராக தொடர்ந்து மக்கள் சேவையில் ஈடுபட்டு, கிண்ணியா பிரதேசத்தின் அபிவிருத்திக்காக தனது பங்களிப்பை வழங்குவார் என்ற நம்பிக்கையையும் வாழ்த்துகளையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.